புலிக்கால்களையும், கைகளையும், கண்களையும் உடைய வியாக்ரபாத முனிவர் இத்தலத்திற்கு வந்து பெருமாளைக் காண பல ஆண்டுகள் தவம் செய்தார். அவருக்கு பெருமாள் சிறிய திருமேனியாக சயனக் கோலத்தில் காட்சியளித்ததால் இத்தலத்திற்கு 'சிறுபுலியூர்' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் சலசயனப் பெருமாள் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் கிருபா சமுத்திரப் பெருமாள். அருள்மாகடலமுதன் என்ற திருநாமமும் உண்டு. தாயார் 'திருமாமகள் நாச்சியார்' என்றும் உத்ஸவ தாயார் 'தயாநாயகி' என்றும் வணங்கப்படுகின்றார். வியாஸர், வியாக்ரபாத முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
புஜங்க சயனத் திருக்கோலத்திலேயே மிகச் சிறிய திருவுருவமான ஸ்தல மூலவரைப் பற்றி திருமங்கையாழ்வார் குறைப்பட்டுக் கொள்ள, "உமது குறைதீர திருக்கண்ணமங்கையில் மிகப்பெரிய திருவுருவம் காண்பாய்" என்று அருளிச் செய்த ஸ்தலம். ஆதிசேஷனுக்கு கருடனிடம் இருந்து அபயமளித்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|